Tuesday, 6 June 2017

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு படியையும் கவனம் நிரப்பிக் கடக்க வேண்டும் பெற்றோர்! பிறந்த குழந்தையைப் பொறுத்தவரையில்... அதன் அழுகைதான் பல மம்மி களுக்கு அலர்ஜியான விஷயம்!

ஆனால், ''அது ஒரு அற்புதமான மொழி... அதைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது குழந்தை வளர்ப்பின் சூட்சமம்'' என்று சொல்லும் சென்னை, எழும்பூர், குழந்தை நல மருத்துவமனையின் பதிவாளர் மற்றும் டாக்டர் ஸ்ரீனிவாசன், அந்த மொழியைப் புரிந்து கொள்ளும் சூத்திரங்களைப் பற்றி பேசுகிறார் இங்கே...

''குழந்தை அழும்போது, என்னவோ ஏதோவென்று அதைவிட அதிகமாக தவித்துப்போகும் தாய் மனது. ஆனால், அதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு சரிசெய்தால், குழந்தையின் அழுகை நிற்கும், அம்மாவுக்கும் நிம்மதி பிறக்கும்!

பொதுவாக, தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை, மருத்துவத்தில் 'குட் சைன்' என்போம். அதுவரை தொப்புள்கொடி மூலமாகவே, ஆக்ஸிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்தபின் முதல் முறையாக தானே சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது செயல்படத்துவங்கும் அதன் நுரையீரலின் சங்கிலித் தொடர் நிகழ்வுதான்... குழந்தையின் அழுகை. எனவே, பிறந்தவுடன் குழந்தை குரலெடுத்து அழுதால்தான்... சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே, இது 'நார்மல் க்ரை' (Normal cry).

அடுத்த அழுகை, 'ஹங்கர் க்ரை' (Hunger cry)...பசிக்காக அழுவது. இதுவும் இயல்பானதுதான். குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை தாயின் உள்ளுணர்வே எளிதாகப் புரிந்துகொள்ளும். அழும் குழந் தையை எடுத்து பால் புகட்டினால், வயிறு நிறைந்தவுடன் அழுகை அடங்கி குழந்தை தூங்கிவிடும். சில குழந்தைகள் பால் குடித்த பின்னும் அழுவார்கள். காரணம், பால் பருகும்போது அந்த வேகத்தில் காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்திருப்பார்கள். இதனால் வயிற்றில் சேரும் காற்றுதான், குழந்தையின் அழுகைக்குக் காரணம். எனவே ஒவ்வொரு முறை குழந்தை பால் குடித்தபின்னும், அதை மெதுவாக தோளில் சாய்த்து, அதன் முதுகில் இதமாக தடவிக் கொடுத்தால், உள்ளே சென்ற காற்று, ஏப்பமாக வெளிவந்துவிடும்.

பால் கொடுக்கும்போது கவனிக்க வேண் டிய விஷயம் ஒன்று இருக்கிறது. தாயின் மார்பகக் காம்புகளில் குழந்தை பால் குடிக்கும்போது முதலில் வரும் 'ஃபோர்மில்க்' (Foremilk) எனப்படும் தண்ணீரானது, குழந்தையின் தாகம் தணிக்கும். பிறகு வரும் கொஞ்சம் அடர்த்தியான 'ஹிண்ட்மில்க்' (Hindmilk), குழந்தையின் பசி தணிக்கும். எனவே, மார்பின் ஒரு காம்பில் முழுக்க பால் குடித்தபின்னே, அதை அடுத்த காம்புக்கு மாற்ற வேண்டும். ஆனால், சில அம்மாக்கள் ஒரு காம்பில் 'ஃபோர்மில்க்' குடித்ததுமே, அவசரமாக அடுத்த காம்புக்கு குழந்தையை மாற்றிவிடுவார்கள். அங்கேயும் 'ஃபோர்மில்க்'கையே குடிக்கும்போது, குழந்தையின் தாகம் தணியுமே தவிர... பசி தணியாது. இதன் காரணமாகவும் குழந்தை அழும். இது புரியாமல்... 'நல்லாதான் பால் குடிச்சுது... ஆனாலும் அழுது அட்டகாசம் பண்ணுது' என்று புலம்புவதில், பலனில்லை.

பெரியவர்களுக்கு சிறுநீர்ப் பை நிரம்பிய வுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட, சிறுநீர் கழிக்கச் செல்கிறோம். ஆனால், பச்சிளம் குழந்தை என்ன செய்யும்? அதன் சிறுநீர்ப் பையில் சிறுநீர் சேர்ந்ததும், அந்த உணர்வை அழுகையாக வெளிப் படுத்தி, சிறுநீர் கழிக்கும். பின் அழுகையை நிறுத்தி விடும். மோஷன் போவதற்கு முன்னும் இப்படி அழும். 'யூரின், மோஷன் போகும்போது அழுதுட்டே போறான்...' என்று இதற்குப் பயப்படத் தேவையில்லை. 'நான் யூரின்/ மோஷன் போகவேண்டும். அல்லது போய்விட்டேன்... என்னை கவனியுங்கள், துணியை மாற்றுங்கள்!' என்பதைத்தான் தன் அழுகையின் மூலம் உணர்த்துகின்றன குழந்தைகள்.

மூன்று மாதக் குழந்தை, வீட்டுக்கு யாராவது புதிதாக வந்தால், பயந்து அழும். அதை தனியாக விட்டுவிட்டு நீங்கள் சமையல், வேலை என்று சென்றுவிட்டால், அந்தத் தனிமை பிடிக்காமல் அல்லது பயந்து அழும். உடை இறுக்கமாக இருந்தால் அழும். தூக்கத்தில் இருந்து எழும்போது, தன் அருகில் யாரும் இல்லை என்றால், கவனத்தை ஈர்க்க, அழும். குளிக்க வைக்கும்போது காதில் தண்ணீர் போய்விட்டால் அழும். எறும்பு, பூச்சி ஏதும் கடித்தால் அழும். குழந்தையை வண்டியில் வைத்து வெளியில் அழைத்துச் செல்லும்போது, காதில் குளிர்காற்று நுழைந்தால் அழும். எனவே, குழந்தையின் ஒவ்வொரும் அழுகைக்கும் ஒரு காரணம் உண்டு. அதைத் தெரிந்துகொள்ளாமல், 'காரணமே இல்லாம அழறான்... உரம் எடுக்கணும்' என்று கிராமத்தில் சொல்வார்கள்'' என்ற டாக்டர் ஸ்ரீனிவாசன்...

''அழுகைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, குழந்தையை சமாதானப்படுத்துவது முக்கியம். 'எப்பப் பார்த் தாலும் அழுதுட்டே இருக்கு. கொஞ்ச நேரம் வேலை பார்க்க விடுதா..?' என்று சலித்து, உங்கள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வரும்வரை குழந்தையை அழவிட்டால், அதன் பாதிப்பை பெற்றோர்தான் சந்திக்க வேண்டும். என்ன பாதிப்பு..? ஏதோ ஒரு காரணத்தினால்தான் குழந்தை அழுகிறது என்று, அழ ஆரம்பித்தவுடன் சென்று சமாதானப்படுத்தும் வீடுகளில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள். 'அழுதா அழு' என்று விடும்போது, தொடர் அழுகையின் மூலம் அந்தக் குழந்தையின் பிடிவாத குணம் இறுகும். விளைவு, அது அடமன்ட் குழந்தை யாக வளரும் என்கின்றன ஆய்வுகள்.

மொத்தத்தில், அழுகை என்பது... குழந்தை யின் மொழி. அதைப் புரிந்து கொள்ள பெற்றோர்தான் பாடம் படிக்க வேண்டும்!'' என்று புரிய வைத்தார் ஆழமாக!

ஆபத்தான அழுகைகள்!

''இயல்பான அழுகைகள்... நாமே சமாளிக்கக் கூடியவை. ஆனால், அதற்கு மீறிய அழுகைகளும் குழந்தைகளிடம் உண்டு. அவை முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை. பிறந்த மூன்று மாதங்களுக்குள் இந்த அழுகை களை இனம் காணலாம்'' என்று சொல்லும் டாக்டர் ஸ்ரீனிவாசன் தந்த அந்த அழுகைப் பட்டியல்...

'பிரெத் ஹோல்டிங் க்ரை' (Breath holding cry): தடுப்பூசி போடும்போது பெரும்பாலும், 'குழந்தை மூச்சு விடாம அழுமா..?' என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார்கள் செவிலியர்கள். அப்படி மூச்சு விடாமல் அழுவதற்குதான் இந்த பெயர். சில குழந்தைகள் கேவிக்கேவி அழும்போது சில நொடிகள் மூச்சு நின்று, பின் வரும். அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டியது அவசியம்.

'வீக் க்ரை' (Weak cry): பிறந்த 15 - 20 நாட்களில் குழந்தை எப்போதும் மெலிதாக அழுதுகொண்டே இருப்பதை இப்படி அழைப்பார்கள். ஏதேனும் தொற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பிருக் கிறது என்பதுதான் இதற்கு அர்த்தம். இதைக் குறிப்பிட்டுச் சொல்லி, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

'ஷ்ரில் க்ரை' (Shrill cry): வீல் வீல் என்று உச்சஸ்தாயில் 10 நிமிடங்கள் வரை குழந்தை நீடித்து அழுவதை இப்படி குறிப்பிடுவார்கள். இப்படி அடிக்கடி அழுதால், அதற்கு வலிப்பு நோய் அல்லது மூளை சம்பந்தமான ஏதோ பிரச்னை இருக்கலாம். மருத்துவரிடம்
எடுத்துச் செல்வது முக்கியம்.

'லோ பிட்ச் க்ரை' (Low pitch cry): கனத்த குரல் அல்லது ஹஸ்கி வாய்ஸில் குழந்தை அழுவது. இதற்கு, தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது காரணமாக இருக்கலாம். மருத்துவப் பரிசோதனை அவசியம்.

Thanks : VASUKI MAHAL KALYANA MANDABAM blog http://www.blogger.com/profile/00967867005630717541.

Monday, 21 December 2015

Hand foot mouth disease (கை கால் வாய் நோய்)

  10 வயதிற்கு குறைவான குழந்தைகளை பாதிக்கும் இந்த நோய். இது வைரஸ் கிருமி மூலம் பரவும் ஒரு தொற்றுநோய். காக்சாக்கி  மற்றும் எண்டிரோ வைரஸ் கிருமிகளே பெரும்பாலும் இதற்கு காரணம்.


 பெயருக்கு ஏற்ப இது கை , கால் மற்றும் வாயில் சிறு சிறு கொப்புளங்களை ஏற்படுத்தும். காய்ச்சல் மிதமாக இருக்கும். கொப்புளம் ஒரு குழுவாக காணப்படும்.  உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் சிவந்த கொப்புளமாகவும் மற்ற இடங்களில் தோலின் நிறத்தோடும் காணப்படும். 

      வாயினுள் வரும் கொப்புளங்கள் வலியை ஏற்படுத்துவதால் குழந்தைகள் சாப்பிடவும், பால் குடிக்கவும் மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் வாயில் இருந்து உமிழ் நீர் வழிந்தபடி இருக்கும்.   இது தொற்றுவியாதி என்பதால் ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும். 

பொதுவாக HFMD என்பது தானாகவே சரியாகிவிடும் வைரஸ் தொற்றுதான்.எனவே இது குறித்து பயம்கொள்ளத்தேவையில்லை .ஆனால் காய்ச்சல் குறையாமல் இருந்தாலோ , மூச்சு விட சிரமம் இருந்தாலோ மருத்துவரை மீண்டும் சந்திக்கவேண்டும். 

மருத்துவம்: சிலர் இந்த கொப்புளங்களை பார்த்தவுடன் பயந்துபோய் அம்மையாக இருக்குமோ என்று எண்ணி தேவையற்ற சிகிச்சைமுறைகளை செய்வார்கள்.அது தேவையில்லை. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்றால் வாய்ப்புண்ணுக்கு தனி மருந்தும் கைகால் கொப்புளத்திற்கு தனி மருந்தும் தருவார்.அதை பயன்படுத்திவர 3 முதல் 5 நாட்களில் குணம் தெரியும். கொப்புளங்கள் அமுங்கி மறைந்தவுடன் சிறு சிறு கறுப்பு புள்ளிகள் சில நாட்கள் காணப்படும் பின் அதுவும் மறைந்து போகும்.


Friday, 1 May 2015

குழந்தைகளுக்கு தரவேண்டிய தடுப்பூசிகள் :


பிறந்தவுடன்.   
        பிசிஜி ஊசி-bcg 
       மஞ்சள்காமாலை பி பிரிவு
      போலியோ சொட்டுமருந்து
6வது வாரம்(45 வது நாள்)
 முத்தடுப்பு ஊசி 
  மஞ்சள் காமாலை பி பிரிவு          மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போலியோ தடுப்பூசி
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து
நிமோனியா தடுப்பூசி 

10 வது வாரம் (75வது நாள்)
           முத்தடுப்பு ஊசி 
மஞ்சள் காமாலை பி பிரிவு மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போலியோ தடுப்பூசி
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து
நிமோனியா தடுப்பூசி 

14 வது வாரம் (105 வது நாள்)
           முத்தடுப்பு ஊசி 
மஞ்சள் காமாலை பி பிரிவு மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போலியோ தடுப்பூசி
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து
நிமோனியா தடுப்பூசி 

6 வது மாதம்:
      மஞ்சள்காமாலை பி பிரிவு மூன்றாம் தவணை

9 வது மாதம்:
       மூவம்மை (MMR) தடுப்பூசி

12 வது மாதம் :
        மஞ்சள்காமாலை ஏ பிரிவு தடுப்பூசி
15 வது மாதம் 
          எம் எம் ஆர் மூவம்மை தடுப்பூசி  சிக்கன்பாக்ஸ் தடுப்பூசி 
நிமோனியா தடுப்பூசி ஊக்கமருந்து 

18 மாதம்: 

முத்தடுப்பு ஊசி 
மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி 
போலியோ தடுப்பூசி

18 மாதம்:
     மஞ்சள்காமாலை ஏ பிரிவு இரண்டாம் தவணை
2 வயது :
     டைஃபாய்ட் தடுப்பூசி
5 வயது:
    முத்தடுப்பூசி 
எம் எம் ஆர்  மூவம்மை தடுப்பூசி
சிக்கன்பாக்ஸ் இரண்டாம் தவணை  
டைஃபாய்ட் தடுப்பூசி இரண்டாம் தவணை  
போலியோ சொட்டு மருந்து 

10 வயது:
இருதடுப்பு ஊசி
கர்ப்ப வாய்புற்று தடுப்பூசி Friday, 24 May 2013

ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு


ரோட்டா வைரஸ் என்றால் என்ன? part one here 


வயிற்றுப்போக்கு குறித்து மேலும் அறிய இணைப்பு


ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கால் இந்தியாவில் நிமிடத்துக்கு ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது

ரோட்டா வைரஸ் நோய்த்தொற்று மற்ற வயிற்றுப்போக்குகளை விட அதிகமான அளவில் நீரிழப்பு மற்றும் உப்பு சத்து இழப்பினை ஏற்படுத்தி உயிரை பறிக்க்கூடியது.

அறிகுறிகள்
      காய்ச்சல்
        வாந்தி
கடுமையான வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் ஏற்படலாம். மேலும் இது ஐந்து முதல் பத்து நாட்களுக்கு நீடிக்கலாம்

சுத்தம், சுகாதாரம் மூலம் இதை தடுக்கமுடியுமா?
சுகாதாரத்தில் வளர்ச்சியடைந்த மேலைநாடுகளில் கூட இந்த வைரஸின் தாக்கம் அதிகம் ; காரணம்
   தண்ணீரில் பலநாட்கள் வரை உயிருடன் இருக்கிறது
   சோப், ஆண்டி செப்டிக் லோஷன்களால் திறம்பட அழிக்கமுடிவதில்லை
வெப்பத்தை எதிர்த்து வாழக்கூடியது
மேலும் காற்று மூலம் எளிதில் பரவக்கூடியது

மருத்துவம் :
  நீரிழப்பு மற்றும் உப்புசத்து குறைபாட்டினை தவிர்க்க ORS எனப்படும் கரைசலை தொடர்ந்து எடைக்கு தகுந்தவாறு தரவேண்டும்
இடைவிடாத வாந்தியினால் ORS கரைசலை குடிக்கமுடியவில்லையெனில் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து இரத்தகுழாய்(சிரை) வழியே நீர்சத்து திரவத்தை உள் செலுத்தவேண்டியிருக்கும்

வரும்முன் காப்பது எப்படி?சுத்தம் ,சுகாதாரம் மூலம் ஓரளவு இதை தடுக்கமுடியும்
தடுப்பூசி மூலம் ரோட்டா வைரஸ் கிருமியின் நோய் தாக்கத்தைக் குறைக்கலாம்

எப்போது தடுப்பூசி போடவேண்டும்?
குழந்தை பிறந்த 6 வ்து வாரத்தில் முதல் தவணையும் ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் தவணையும் போடவேண்டும்
இரு தவணைகளையும் 6 மாதங்கள் பூர்த்தியடையும் முன்பே போட்டுவிடுவது நல்லது.
6 மாதங்களுக்கு பிறகு போடக்கூடாது.அப்படி போட்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

ரோட்டா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் வயிற்றுப்போக்கு வருமா?
  வரலாம். இதர பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் தொற்றினால் வயிற்றுப்போக்கு வரலாம் . ஆனால் கடுமையான , மருத்துவமனையில் அனுமதிக்க செய்யும் அளவுக்கு ரோட்டா வைரஸ் நோய் வராது
இதன் விலை எவ்வளவு/
ஒரு தவணைக்கு தோராயமாக 1000-1100 ஆகிறது.
ஒரு நல்ல செய்தி:
   ஒரு இந்திய நிறுவனம் புதிய தடுப்பூசியை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. இதன் விலை வெறும் 54 ரூபாயில் தரமுடியும் என உறுதியளித்துள்ளது . இந்த மருந்து அடுத்த ஆண்டு முதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


annexure : courtesy :BBC NEWS

Rotavirus kills more than 100,000 children in India every year


Scientists in India have unveiled a new low-cost vaccine against a deadly virus that kills about half a million children around the world each year.

Rotavirus causes dehydration and severe diarrhoea and spreads through contaminated hands and surfaces and is rampant in Asia and Africa.

India says clinical trials show the new vaccine, Rotavac, can save the lives of thousands of children annually.

An Indian manufacturer said the vaccine would cost 54 rupees ($1; £0.65).

International pharmaceutical companies produce similar vaccines but each dose costs around 1,000 rupees.

"This is an important scientific breakthrough against rotavirus infections, the most severe and lethal cause of childhood diarrhoea, responsible for approximately 100,000 deaths of small children in India each year," India's Department of Biotechnology official K Vijay Raghavan said.

"The clinical results indicate that the vaccine, if licensed, could save the lives of thousands of children each year in India," he added.

Rotavac will be made by Hyderabad-based Bharat Biotech. The company said it could mass-produce tens of millions of doses after clearance is given, expected in eight or nine months.

Thursday, 23 May 2013

ரோட்டா வைரஸ் என்பது என்ன? பகுதி-ஒன்று
ரோட்டா வைரஸ் என்பது என்ன?  பகுதி-ஒன்று


ரோட்டா வைரஸ் என்பது கடுமையான
வயிற்றுப்போக்கினை ஏற்படுத்தும் கிருமியாகும். ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளை அதிகம் பாதித்து நீரிழப்பினை ஏற்படுத்தி உயிரைப்பறிக்கும் ஒரு கொடூரமான வைரஸ் ஆகும்உலகம் முழுவதும் வருட்த்திற்கு ஆறு லட்சம் குழந்தைகளை இது கொல்கிறது

ரோட்டா வைரஸ் – சக்கரம் போன்ற வடிவில் இருக்கும் (அதனாலேயே ROTA VIRUS என்ற பெயர்)

ரோட்டா வைரஸ் வெகு சுலபமாக பரவக்கூடியது.இது முக்கியமாக கைகள்,பொம்மைகள், பொருட்கள்,தரை பரப்புகள் மற்றும் ஒரு நபர் இன்னொரு நபரை தொடுவதன் மூலமாக தொற்றிக்கொள்ளக்கூடியதாகும்.

மேலும் இவைகள் காற்று மூலமாகவும் பரவுகிறது(தும்மல்,இருமல்)


Sunday, 5 May 2013

அம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?

அம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?

அம்மை என்பது வைரஸ் (virus) கிருமியினால் ஏற்படும் தொற்றுவியாதி. காற்றின் மூலமும் ,தொடுவதின் மூலமும் வேகமாகப் பரவக்கூடியது .

இறைநம்பிக்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை.மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
மருத்துவ மனைக்கு செல்லும் முன் முன்னேற்பாடாக முன் பதிவு செய்யும்போது இது குறித்து நாம் தெரிவித்து விடவேண்டும். இதனால் நாம் காத்திருக்க தேவையில்லாமல் உடனே காண்பித்துவிட்டு வரலாம்.பிறருக்கு நோய் தொற்று வராமல் தடுக்கலாம்.
அல்லது மொபைலில் படம் எடுத்தும் சென்று காண்பிக்கலாம் .  குழந்தகளைத் தாக்கும் பொதுவான அம்மை நோய்கள்

1.)மணல்வாரி அம்மை(Measles)

2.)தாளம்மை(புட்டாலம்மை)(Mumps)

3.)சிக்கன்பாக்ஸ் (நீர் குளுவான் அம்மை)(chickenpox )

4.)ருபெல்லா அம்மை (Rubella)(German Measles)


மணல்வாரி அம்மை:
6 மாதம் முதல் 2 வயதுடைய குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.
முகம்,கழுத்து மற்றும் காதின் பின்புறம் ஆகிய இடங்களில் தொடங்கி பின் உடலின் கீழ்பகுதிகளுக்கு பரவும்.
இதற்கான தடுப்பூசி உள்ளது . 9 வது மாதமுடிவில் முதல் தவணை தனியாகவும், 15 மாதத்தில் MMR என்ற மூவம்மை ஊசியாக இரண்டாம் தவணையும் 5 வயதில் MMR மூலம் இறுதி தவணையும் போடவேண்டும்.

மணல்வாரி அம்மை வந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும்.காய்ச்சலைக்குறைக்கும் மருந்துகளும் ,வறட்டு இருமலை குறைக்க மருந்துகளும் தருவார். இதுபோல் மணல்வாரி அம்மை வந்த குழந்தைகளுக்கு விட்டமின் A நீர்மக்கரைசலை கட்டாயம் தரவேண்டும்.அதையும் மருத்துவர் தருவார் .

மணல்வாரி அம்மை வைரஸ் கிருமி என்றபோதிலும் அது உடலில் எதிர்ப்புசக்தியை வெகுவாகக் குறைப்பதால் பாக்டீரியா நோய்த்தொற்று எளிதில் ஏற்பட்டு நிமோனியா சளி,கடுமையான வயிற்றுப்போக்கு எற்படும்.எனவே மிகக்கவனம் தேவை .

தாளம்மை/புட்டாலம்மை
இது மம்(ப்)ஸ் எனப்படும் வைரஸ் கிருமியினால் வருவது. தாடையில் உள்ள உமிழ்நீர்சுரப்பியை பாதிப்பதால் தாடையின் இருபுறமும் காதிற்கு கீழ் உள்ள பகுதி வீங்கியிருக்கும் .காய்ச்சல் இருக்கும்.

இதற்கான தடுப்பூசி 15 மாதம் மற்றும் 5 வயதில் இரு தவணைகளாக MMR என்ற தடுப்புசி வழியாக போடப்படுகிறது


மருத்துவரை அணுகினால் காய்ச்சல் குறையவும்,தாடை வலி குறையவும் மருந்து தருவார்

சிக்கன்பாக்ஸ் : இது குறித்த தகவல்களை  இணைப்பில் படியுங்கள்


ருபெல்லா அம்மை :
இது பொதுவாக மிதமான காய்ச்சல் , இருமல் மற்றும் கழுத்தைச் சுற்றிலும் சிறுசிறு நெறிகட்டிகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது

ஆனால் கர்ப்பிணிகளுக்கு ருபெல்லா வந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்
1.பிறவி காது கேளாமை
2.இருதய குறபாடு
3.கண் புரை நோய்
4.வளர்ச்சியடையாத தலை

பெண்குழந்தக்கு கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும். 15 வது மாதம் மற்றும் 5 வயதில் இரு தவணைகளாக MMR என்ற தடுப்பூசி போடப்படுகிறது .

ஏற்கனவே போடவில்லையென்றாலும் பருவம் அடைந்தபின்னோ அல்லது திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்போ போட்டுக்கொள்ளவேண்டும் .

அதாவது தடுப்பூசி போட்ட 3 மாதங்களுக்குள் கருத்தரிக்கக்கூடாது


Wednesday, 1 May 2013

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள் :

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

1.) முட்டையின் மஞ்சள் கரு (egg yolk)
மஞ்சளில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது.ஒரு நாள் முழுக்க தேவையான அளவைவிட அதிக அளவில் ஒரே முட்டையில் உள்ளது. வெள்ளைக்கருவில் புரதம்(protein) அதிகமிருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு மட்டுமே போதுமானது

2.) மைதா மாவில் செய்த உணவுகள் -
மைதா என்பது ஒரு சீரழிந்த கோதுமை. நார்சத்து அறவே அற்றது.எனவே குழந்தைகளின் உடல் பருமனைக்குறைக்க அறவே தவிர்க்கவேண்டும். உதாரணம்- பரோட்டா,பஃப்ஸ், பன் ,பிரட்

3.) ஆட்டிறைச்சி தவிர்க்கப்படவேண்டும்..(எண்ணையில் பொரிக்காத கோழி மற்றும் மீன் தரலாம்-க்ரேவி அல்லது குழம்பு)

4.) எண்ணையில் பொரித்த உணவுகள்

5.) குளிர்பானங்கள் - கோலா பானங்கள் ; இவைகளில் empty calories தான் உள்ளன்.இவை கட்டாயம் உடல் பருமனை உண்டாக்கும்

6.) நொறுக்குத்தீனிகள் -உருளை சிப்ஸ்

7.) மாவுச்சத்து அதிகமுள்ள-உருளைக்கிழங்கு,வாழைக்காய்,வாழைப்பழம்

8.) இரவில் அரிசி சோறு தவிர்க்கவும்

9.) கேக், ஐஸ்கிரீம் -அடிக்கடி தருவதை தவிர்க்கவும்

10.) காலை உணவினை தவிர்க்ககூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து பள்ளியில் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும். மேலும் பட்டினி இருப்பதால் அடுத்தவேளை உணவின் சத்துக்களை கொழுப்பாக மாற்றி சேமிக்கத்தொடங்கும்.இதுவே உடல் பருமனின் ஆரம்பப்புள்ளியாக மாறலாம்.சரியான வேளையில் மிதமான அளவில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதில்லை

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...